ஆந்திராவில் 10 நாளில் மூன்றிலிருந்து 4 லட்சமானது பாதிப்பு: குணமடைவோர் சதவீதமும் அதிகரிப்பு:
அமராவதி: ஆந்திராவில் நேற்று (ஆக., 28) ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு, நான்கு லட்சமானது.
ஆந்திராவில் நேற்றைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,03,616 ஆக அதிகரித்தது. இதில் 3,03,711 பேர் குணமடைந்துள்ளனர். 3,714 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
நேற்று 61,331 பரிசோதனைகள் நடந்தன. இதில் 10,526 பேருக்கு தொற்று உறுதியானது. ஆந்திராவில் இதுவரை 35.41 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நோய் தொற்று விகிதம் 11.4 சதவீதமாக உள்ளது.
இதனால் இன்னும் ஓரிரு தினங்களில் ஆந்திராவானது தொற்று பாதிப்பில் தமிழகத்தை முந்தி மஹாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தை பிடிக்கும் எனத் தெரிகிறது. ஜூன் 24ம் தேதி வரை ஆந்திராவில் கொரோனா பாதிப்பு 10,000 ஆக இருந்தது. சோதனைகளை அதிகப்படுத்தியவுடன் ஒரு மாதத்தில் இது வேகமாக உயர்ந்தது. ஜூலை 20ல் பாதிப்பு 50 ஆயிரமானது. ஜூலை 27ல் ஒரு லட்சத்தை எட்டியது. ஆக., 1ம் தேதி 1.5 லட்சமானது, ஆக., 7ல் இரண்டு லட்சத்தையும், ஆக., 12ல் 2.5 லட்சத்தையும் எட்டியது. ஆக., 18ல் மூன்று லட்சமாக இருந்த பாதிப்பு, முன்னெப்போதும் இல்லாத வகையில், 10 நாட்களில் மின்னல் வேகத்தில் அதிகரித்து தற்போது நான்கு லட்சத்தை தாண்டியுள்ளது.
மார்ச் 12 அன்று ஆந்திராவில் முதல் தொற்று பதிவானது, அதிலிருந்து 170 நாட்களில் 4 லட்சத்தை பாதிப்பு கடந்துள்ளது. அதே சமயம் குணமடைவோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.