ஊரடங்கில் தளர்வு: முதல்வர் ஆலோசனை:
சென்னை: ஆகஸ்ட் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக கலெக்டர்களுடன் முதல்வர் இ.பி.எஸ்., வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்தினார். பின்னர், மருத்துவ குழுவினருடனும் முதல்வர் ஆலோசனை நடத்தினார். ஊரடங்கில் தளர்வு வழங்கப்படுவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது:காய்ச்சல் முகாம் மூலம் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா காலத்தில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம செய்யப்பட்டுள்ளனர். கூடுதலாக மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், முன்கள பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கப்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் சிக்கி தவித்த தமிழர்களை பத்திரமாக மீட்டு வந்துள்ளோம். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணியை மாவட்ட கலெக்டர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ுகாதார பணியாளர்களுடன் ஆலோசித்து தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர்கள் தீவிரப்படுத்த வேண்டும்.ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா முக கவசங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை வழங்கி வருகிறது.தொழில் பணிகள் தொய்வில்லாமல் நடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்திலும் தமிழகம் அதிகளவில் முதலீடுகளை ஈர்த்துள்ளது.கொரோனா காலத்தில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளை களைய 200 கோடி ரூபாய் மதிப்பில் செயல்திட்டம். மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுவதை கலெக்டர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.டெங்கு கொசு உருவாகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.