தமிழகத்தில் பொது ஊரடங்கு தொடர்கிறது!
தமிழகத்தில் நாளை வரை பொது ஊரடங்கு அமலில் உள்ளது. அது மேலும் நீட்டிக்கப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் கருதி கடைகள், ஓட்டல்கள், டீ கடைகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்படுகின்றன.
ஆனால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல 'இ- - பாஸ்' நடைமுறை அமலில் உள்ளது.பஸ், ரயில் ஓடாததால் மக்கள் கார் உள்ளிட்ட வாகனங்களில் தொழில் நிமித்தமாகவோ, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கோ வெளியூர் செல்ல வேண்டிய நிலைமை உள்ளது.அதனால் இ - பாஸ் முறை ரத்து செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். அதற்கேற்ப மத்திய அரசும் 'மாநிலங்களுக்கு இடையேயும் மாநிலத்திற்கு உள்ளேயும் பொது மக்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் சென்று வர எந்த தடையும் விதிக்கக் கூடாது; அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற நிலையும் கூடாது' என நேற்று இரவு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த உத்தரவை அமல்படுத்துவது குறித்து நேற்றிரவு வரை சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.அதன்பின் இ - பாஸ் முறையை படிப்படியாக தளர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது; எனினும் முழுமையாக ரத்து செய்யப்பட வாய்ப்பு இல்லை.மேலும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு கூடாது என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்த அறிவுரையையும் தமிழக அரசு முழுமையாக ஏற்க முன்வரவில்லை.செப். 30 வரை மாநிலம் தழுவிய ஊரடங்கை நீட்டிக்கவே விரும்புகிறது.ஆனாலும் 'மதுக்கடைகள் திறந்திருக்கின்றன; வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படவில்லை' என்ற புகார் மக்களிடத்தில் உள்ளது. எனவே நோய் பரவல் அதிகம் உள்ள பகுதிகள் தவிர்த்த பிற இடங்களில் வழிபாட்டு தலங்களை திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.இதுபோன்ற மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதுகுறித்து முடிவு செய்வதற்காக மத்திய அரசு அறிவிப்பு வெளியாகும் முன்பே நேற்று காலை மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் பழனிசாமி 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக ஆலோசனை நடத்தினார்.ஊரடங்கு மற்றும் இ -- பாஸ் நடைமுறை தொடர்பாக கலெக்டர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். மாலையில் மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் அடிப்படையில் செப். 30 வரை பொது ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.மேலும் என்னென்ன தளர்வுகள் அமலுக்கு வரும் என்பது முதல்வரின் இன்றைய அறிவிப்பில் தெரிய வரும்.சென்னை ஆக. 30-தமிழகத்தில் பொது ஊரடங்கு மேலும் ஒரு மாதம் தொடர்கிறது. அதே நேரத்தில் வழிபாட்டு தலங்கள் திறப்பு உட்பட மேலும் பல தளர்வுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன.
கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை:
சென்னை :கொரோனா வைரஸ் தடுப்பு பணி மற்றும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் பழனிசாமி நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக ஆலோசனை நடத்தினார்.அப்போது அவர் பேசியதாவது:அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்துதல் வீடு வீடாக சென்று நோய் அறிகுறி உள்ளவர்களைக் கண்டறிதல், நோய் பாதித்தவர்களை தனிமைப்படுத்துதல் சிகிச்சை அளித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.கொரோனா நோய் அறிகுறிகள் தென்பட்டால் 24 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கலெக்டர்கள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மூத்த குடிமக்கள், இணை நோய் உள்ளோரின் மாதிரிகளை முன்னுரிமை அடிப்படையில் விரைந்து முடிவுகளை அறிவிக்க வேண்டும்.கொரோனா சிறப்பு மையங்களில் உணவு குடிநீர் கழிப்பிட வசதிகளை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.பருவ மழை காலம் துவங்க உள்ளது. அதற்கு முன்னதாக குடிநீர், சாலை, திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி பருவகால சவால்களை திறம்பட கையாள மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்க வேண்டும். மழை நீர் வடிந்து செல்ல தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.