வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்களுக்கு 14 நாட்கள் தனிமை கிடையாது - சென்னை மாநகராட்சி ஆணையர்:
வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்களுக்கு 14 நாட்கள் தனிமை கிடையாது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
பல்வேறு தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் கொரானாவைத் தடுக்க சென்னை பெருநகர மாநகராட்சி மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் மற்றும் புதிய உத்திகள் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பொருளாதாரத்தை மீட்டெடுக்க தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை பெருநகர மாநகராட்சியில் சோதனை மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை நெருங்கியுள்ளது எனவும் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் சென்னையில் பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படமாட்டாது எனவும் தொழில் நிறுவனங்கள் அத்தனையும் திறக்கப்பட்டுள்ளதால் வீடு வீடாகச் சென்று சோதனை நடத்தியது போல் நிறுவனங்களுக்கும் சென்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிபிட்டார்.
வீட்டில் தனிமைப்படுத்துவதில் சில மாற்றங்கள்:
வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்கள் இனி 14 நாட்கள் தனிமையில் இருக்கத் தேவையில்லை எனவும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்யப்படுவார்கள் எனவும் அறிகுறி இல்லை என்றால் வீட்டு தனிமையில் வைக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிபிட்டார். மேலும், குறைந்தது 3 மாதங்களுக்கு மக்கள் கவனத்துடனும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று கூறிய அவர், முகக்கவசம், சமூக இடைவெளியை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றார்.
மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் இனி தகரம் அடித்து அடைக்கப்படமாட்டாது என அவர் உறுதியளித்தார். மக்களின் ஒத்துழைப்பு நல்லபடியாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.