ஆன்லைன் வகுப்புகள் குறித்த மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு விதிமுறைகளை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு
ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வழிகாட்டு விதிமுறைகளை அனைத்து பள்ளிகளும் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கொரோனா ஊரடங்கினால் பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆன்லைன் வகுப்புகள் செல்லும், மாணவ, மாணவியர் ஆபாச இணையதளங்களை பார்க்கக்கூடும். ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களின் விழித்திரை பாதிக்கப்படும். ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளால், செல்போன் போன்றவை இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாது என்று பல காரணங்களை கூறி, இந்த வகுப்புக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் சரண்யா, வக்கீல் விமல்மோகன் உள்பட பலர் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது, ஆன்லைன் வகுப்புக்கு உரிய வழிகாட்டு விதிமுறைகளை மத்திய அரசு வகுத்தது. இதன் அடிப்படையில் தமிழக அரசும் விதிகளை அறிவித்தது.
இந்த வழக்குகளை எல்லாம் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர். மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன், ஜெ.ரவீந்திரன் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், நேற்று தீர்ப்பை பிறப்பித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
கொரோனா காரணமாக தொழில்நுட்பம் சார்ந்த கல்விமுறை மாணவர்களிடம் திணிக்கப்பட்டுள்ளது. இயல்புநிலை திரும்பும் வரை இந்த முறையை கடைப்பிடிக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களில் எந்த தவறும் இல்லை. ஆனால், அதை தவறாக பயன்படுத்தும் விதத்தில் தான் தவறு ஏற்படுகிறது.
எனவே மாணவர்களின் நலன் கருதி கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கின்றோம். மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் வகுப்புகள் குறித்து உருவாக்கியுள்ள வழிகாட்டு விதிமுறைகளையும், ஆன்லைன் வகுப்புகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கால நேரத்தையும் அனைத்து பள்ளிகளும் தீவிரமாக பின்பற்ற வேண்டும். ஆபாச இணையதளங்களை முடக்கும் விவரங்களை பள்ளிகளுக்கும், பெற்றோர்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
வகுப்புகளின் விவரங்களை பெற்றோருக்கு ‘வாட்ஸ்ஆப்’ மூலமாகவும், பள்ளி இணையதளங்களில் பதிவேற்றம் செய்தும் பள்ளி நிர்வாகங்கள் தெரியப்படுத்த வேண்டும். ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்க மாவட்ட அளவில் ஒரு கண்காணிப்பு குழுவை தமிழக அரசு உருவாக்க வேண்டும். மாதம் ஒருமுறை இந்த குழுவின் கூட்டம் நடக்க வேண்டும்.
ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் போது இணைப்பு வசதிகள் உள்ளிட்டவைகளை கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக அரசு பள்ளிகள், ஆசிரியர்கள் பாடம் நடத்தும் காட்சியை வீடியோ படம் பிடித்து, அதை சமூக கூடத்தில் வைத்து மாணவர்களுக்கு திரையிட்டு காட்ட முடியுமா? என்பதை பரிசீலிக்க வேண்டும். ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை பள்ளிக்கூடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து நடத்த முடியுமா? ஆசிரியர்கள் நேரடியாக சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியுமா? என்பதை எல்லாம் பள்ளிக்கூட நிர்வாகங்கள் ஆராய வேண்டும்.
மாணவர்கள் வருகை பதிவேடு, தேர்வுகள் ஆகியவை குறித்து அரசு உருவாக்கியுள்ள விதிமுறைகளையும், பிரி.கே.ஜி. வகுப்புகள் தொடர்பான விதிமுறைகளையும் ஒவ்வொரு பள்ளிகளும் தீவிரமாக பின்பற்ற வேண்டும்.
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஆன்லைன் வகுப்புக்குரிய வழிகாட்டு விதிமுறைகளை தமிழில் மொழிபெயர்த்து அனைத்து பள்ளிகள் வாயிலாக பெற்றோருக்கு தமிழக அரசு வழங்க வேண்டும். ஆன்லைன் வகுப்புகளில் ஏதாவது பிரச்சினை என்றால் அதுகுறித்து புகார் தெரிவிக்க வசதியாக தொலைபேசி எண்களை சைபர் கிரைம் போலீசார் விரைவாக அறிவிக்க வேண்டும்.
ஆன்லைன் வகுப்புகளின் போது ஏதாவது ஆபாச இணையதளம் குறுக்கிடுவதாக ஏதாவது புகார்கள் வந்தால், அதன் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து விரைவாக, அதாவது 3 மாதங்களுக்குள் புலன் விசாரணையை போலீசார் முடிக்க வேண்டும். எங்களுடைய இந்த உத்தரவு தமிழகத்தில் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் பொருந்தும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.