ஆம்பூர் அருகே வங்கியில் தந்தை வாங்கிய கடனுக்காக வீட்டை ஜப்தி செய்ய வந்த வங்கி அதிகாரிகள், காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் மகள் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.
வாணியம்பாடி,நவ.7- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கைலாசகிரி முருகன் கோயில் மலையடிவார பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி பாலாஜி. இவருக்கு இரண்டு மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
முதல் மனைவிக்கு கவிதா என்ற மகளும், இரண்டாவது மனைவிக்கு நித்யா, சுகன்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் பாலாஜி கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு முன்பு ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் வீடு கட்ட 33 லட்சம் கடன் வாங்கி வீடு கட்டி உள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக வங்கியில் வாங்கிய கடனுக்காக பாலாஜி கடன் தவணை செலுத்தி வந்த நிலையில் திடீரென உடல் நலக்குறைவால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் வங்கியில் வாங்கிய கடன் பாதியில் கட்டாமல் இருந்ததாக வங்கி தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் பாலாஜியின் மகள் கவிதா வங்கியில் தொடர்ந்து கடன் சில தவணையை செலுத்தி வந்ததாகவும் பிறகு இரண்டு மனைவியின் வாரிசுகளால் பிரச்சனை என்பதால் வாரிசு சான்றிதழ் செலுத்துமாறு வங்கி தரப்பில் அறிவுறுத்தப்பட்டு
செலுத்திய தவணையை கடந்த ஆண்டு வங்கி அதிகாரிகள் திருப்பி கொடுத்து விட்டதாக கவிதா தரப்பில் கூறப்படுகிறது.
தொடர்ந்து வங்கியில் வாங்கிய கடன் நிலுவையில் இருந்ததால் வங்கி அதிகாரிகள் கடந்த 2021 ஆம் ஆண்டு பாலாஜியின் வீட்டை ஏலம் விட்டதாகவும், வீட்டை பாலாஜியின் தாய்மாமன் கிருஷ்ணமூர்த்தி என்பவரே ஏலம் எடுத்ததாக கூறப்படுகிறது .
மேலும் வாரிசு தொடர்பாக இருதரப்பிலும் ஆம்பூர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் வங்கி தரப்பில் ஏலம் விடப்பட்டது தங்களுக்கு தெரியவில்லை எனவும் கவிதா தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஏலம் எடுத்துள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஏலம் எடுத்து 3 ஆண்டுகள் ஆகியும் தங்களுக்கு வீட்டை காலி செய்து கொடுக்கவில்லை எனக்கோரி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கானது கிருஷ்ணமூர்த்திக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதாக கூறி வங்கி அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற வழக்கறிஞர்கள் காவல்துறையினர் முன்னிலையில் பாலாஜியின் வீட்டை ஜப்தி செய்ய வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது வாரிசு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் வாரிசுகளுக்கு தெரியாமல் தன் தந்தை பெயரில் உள்ள வீட்டை வங்கி அதிகாரிகள் ஏலம் விட்டதாகவும் இதனால் வீட்டை ஜப்தி செய்ய விட மாட்டோம் எனக்கூறி வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கவிதா வீட்டின் உள்ளே சென்று திடீரென தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்தியதால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் வங்கி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாட்களுக்குப் பிறகு வங்கியில் நேரடியாக சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு கவிதாவிடம் அறிவுறுத்திய பின்னர் அங்கிருந்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக பெரும் பரபரபரப்பான சூழல் நிலவியது.