பினாகா மல்டி பேரல் ராக்கெட் லாஞ்சர் உற்பத்தி..! 5000 கோடி பட்ஜெட்..! களமிறங்கும் எல் அண்ட் டி, டாடா நிறுவனங்கள்..!
பாதுகாப்பு அமைச்சகம் ரூ 5000 கோடி மதிப்பிலான பினாகா மல்டி பேரல் ராக்கெட் லாஞ்சர்களை உள்நாட்டில் தயாரித்து பெறுவதற்கான ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தனியார் தொழிலுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கிறது. இந்த ஒப்பந்தம் வரும் மாதங்களில் பல நூறு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று தி எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம், தனியார் துறை நிறுவனங்களான எல் அண்ட் டி மற்றும் டாடா ஏரோஸ்பேஸ் அண்ட் டிஃபென்ஸ் நிறுவனங்களுக்குச் செல்லும். இதில் கணிசமான பகுதியும் பொதுத்துறை நிறுவனமான பிஇஎம்எல் நிறுவனத்தில் அடங்கும். பிஇஎம்எல் நிறுவனம் ராக்கெட் லாஞ்சர்களுக்கு லாரிகளை வழங்குகிறது.
ஆறு புதிய ரெஜிமென்ட்களில், எல் அண்ட் டி நிறுவனத்திற்கு நான்கு உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு டாடா ஏரோஸ்பேஸ் மற்றும் டிஃபென்ஸ் நிறுவனங்களால் செய்யப்படும். இது இராணுவத்தில் இருந்து இந்திய தனியார் துறைக்கு வழங்கப்பட்டுள்ள மிகப்பெரிய ஆர்டர்களில் ஒன்றாகும்.
பினாகா திட்டம் இந்திய பாதுகாப்புத் துறைகளின் வெற்றிக்கதைகளில் ஒரு முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது. ஏற்கனவே இரண்டு ரெஜிமென்ட்களில் தற்போது சேவையில் உள்ள இந்த ராக்கெட் லாஞ்சர்கள் தொழில்நுட்ப பரிமாற்றத்தின் மூலம் டிஆர்டிஓவால் வெற்றிகரமாக தனியார் துறையினருக்கு மாற்றப்பட்டுள்ளன.
தி எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தனியார் துறையால் முழுமையாக தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டுகளும் இந்த மாதத்தில் இராணுவத்தால் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன எனத் தெரிவித்துள்ளது. பினாகா ராக்கெட்டுகள் பொக்ரானில் சோதனை செய்யப்பட்டன.
இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி சோதனை முழுமையாக வெற்றியடைந்தது. ராக்கெட்டுகள் எகனாமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் லிமிடெட் (ஈஇஎல்) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும் இது இந்தியாவில் தனியார் துறையால் தயாரிக்கப்பட்ட முதல் ஆயுதமாகும்.
ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) இதை உருவாக்கியது. பினாகா அனைத்து வானிலைகளிலும் திறமையாக செயல்படும் திறன் கொண்டது.