இனி பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி..!
கொரோனா ஊரடங்கு காரணமாக கட்டுப்பாட்டுகளுடன் இயங்கி வந்த பெட்ரோல் பங்குகள் இனி இரவு 10 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தி 5 மாதங்களாகியும் தொற்று பரவல் குறைந்தபாடில்லை. இருப்பினும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் துரிதமாக எடுத்து வருகின்றன.
இதனிடையே, ஊரடங்கில் 4வது கட்ட தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அண்மையில் வெளியிட்டன. அதன்படி, பொதுபோக்குவரத்து, வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
ஊரடங்கின் போது பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டும் செயல்பட அரசு அனுமதியளித்திருந்தது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கான வாகனங்களுக்கு மட்டும் பிற நேரங்களில் எரிபொருள் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், பெட்ரோல் பங்குகள் இனி இரவு 10 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கி வந்த பெட்ரோல் பங்குகள், இனி கூடுதலாக இரண்டு மணி நேரம் சேர்த்து இரவு 10 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.