சமீப காலங்களாகவே கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில் பல நிறுவனங்கள் முடங்கி போயுள்ளன எனலாம். ஆனால் இதற்கிடையிலும் சில நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடுகளை அதிகரித்து வருகின்றன. அப்படி இந்த ரணகளத்திலும் படு சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். கடந்த சில மாதங்களாகவே முகேஷ் அம்பானியின் காட்டில் பணமழையாக பெய்து வருகின்றது எனலாம்.
பங்கு விலை புதிய உச்சம் ஏனெனில் அந்தளவுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தொடர்ந்து முதலீடுகளை அதிகரித்து வருகின்றது. இதனை எதிரொலிக்கும் விதமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று அதன் பங்கு விலையானது பிஎஸ்இயில் 1.6% ஏற்றம் கண்டு, புதிய உச்சமான 1908 ரூபாயினை தொட்டுள்ளது.
பங்கு விலை ஏற்றம் இந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 12.09 டிரில்லியன் டாலரினை தொட்டுள்ளது. இது இந்திய பொருளாதாரத்தில் வரலாறு காணாத மதிப்பாகும். மார்ச் நடுப்பகுதியில் இருந்து இதன் பங்கு விலை 120% அதிகமாக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனம் கடன் இல்லா நிறுவனமாக மாற்ற அதன் ஆயில் வர்த்தகம் முதல் டிஜிட்டல் வர்த்தகம் வரையில் பல முதலீடுகளை திரட்டி வருகின்றது.
மேலும் ஒரு முதலீடு இதற்கிடையில் இந்த வாரத்தில் அதன் பொதுக்குழு கூட்டத்தினை நடத்தவும் ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது. ஏற்கனகே பேஸ்புக் உள்ளிட்ட பல வெளிநாட்டு நிறுவனங்கள் ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோவில் முதலீடு செய்து வரும் நிலையில், கடந்த ஞாயிற்றுகிழமையன்று Qualcomm Inc குழுமத்தின் முதலீட்டு நிறுவனமான Qualcomm Ventures ஜியோவில் 0.15% பங்குகளை வாங்குவதாகவும், அதற்காக ஜியோவில் 730 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்து இருந்தது.
எவ்வளவு முதலீடு? இது ரிலையன்ஸ் குழுமத்தில் செய்யப்படும் மிகப்பெரிய 12வது முதலீடாகும். பேஸ்புக், ஜெனரல் அட்லாண்டிக், விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ், அபுதாபியின் முபதாலா, சில்வர் லேக், பிஐஎஃப், இன்டெல் கேப்பிட்டல், தற்போது இந்த வரிசையில் குவால்காம் வென்சர்ஸ் நிறுவனமும் முதலீடு செய்ய உள்ளது. ஆக மொத்தத்தில் ஜியோவின் 25.24% பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அதன் மூலம் 1,18,318.45 கோடி ரூபாய் நிதியினையும் திரட்ட உள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.
ரிலையன்ஸின் உரிமை பங்கு வெளியீடு மேற்கண்ட இத்தகைய முதலீடுகளுடன், ரிலையன்ஸ் நிறுவனம் உரிமை பங்கு வெளியீட்டின் மூலம் 53,124 கோடி ரூபாய் நிதியினை திரட்டியது. கடந்த மார்ச் நிலவரப்படி இந்த நிறுவனத்தின் கடன் மதிப்பு 1.61 டிரில்லியன் ரூபாயாக இருந்தது. இந்த நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் முதலீடு மற்றும் உரிமை பங்கு வெளியீட்டு மூலம் திரட்டிய நிதியின் மூலம், தற்போது கடன் இல்லா நிறுவனமாகவும் மாறியுள்ளது. இந்த நிலையில் தான் ரிலையன்ஸ் நிறுவனம் இப்படி ஒரு அசுர வளர்ச்சியினை கண்டுள்ளது. உண்மையில் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.