தமிழகத்தில் ரூ.5,137 கோடி முதலீட்டில் தொழில் தொடங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான கொரோனா காலத்துக்கு நடுவே புதிய தொழில் திட்டங்களைத் தொடங்கும் நோக்கில் கடந்த வாரம் ரூ.10,399 கோடி மதிப்பிலான 8 புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது தமிழக அரசு. இதன் மூலம் சுமார் 13,500-க்கும் அதிகமானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாகத் தற்போது மேலும் ரூ. 5,137 கோடிக்கு 16 நிறுவனங்களுடன் புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று தமிழக அரசு கையெழுத்திட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தொழில்துறையின் முதன்மைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி நீரஜ் மிட்டல் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். நிறுவன அதிகாரிகள் மூலம் ஒரு சில ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டால் மற்றவை அனைத்தும் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் செய்யப்பட்டன.
அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் ரூ.2,300 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மேலும், பிரின்ஸ்டன் டிஜிட்டல் குழுமம் ரூ.750 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த இரண்டு முதலீடுகளும் செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரியில் வரவுள்ளன. காஞ்சிபுரம் சிப்காட் தொழிற்பூங்காவில் சூப்பர் ஆட்டோ போர்க் நிறுவனம் ரூ.500 கோடியில் உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கவுள்ளது. மேலும், இதே வளாகத்தில் ஏர்ப்ளோ நிறுவனம் ரூ.320 கோடி முதலீட்டில் போக்குவரத்து உபகரணங்கள் உற்பத்தி செய்யும் திட்டத்தைத் தொடங்கவுள்ளன.
இதையடுத்து திருநெல்வேலி மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம், செங்கல்பட்டின் மறைமலைநகர், சிறுசேரி போன்ற இடங்களில் மேலும் பல தொழில்துறைகள் தொடங்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுப் பயணத்தின்போது `யாதும் ஊரே திட்டத்தை’ தொடங்கிவைத்தார். அந்தத் திட்டத்தின் கீழ் ஏழு தொழில்நுட்ப திட்டங்கள் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் ஒப்பந்தமாகியுள்ளன.