மும்பை: கொரோனா தொற்று காரணமாக 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வாராக்கடன் அதிகரிக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 4 மாதங்களில் வங்கி பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்வு மற்றும் கடன் நிலுவையை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றினை ரிசர்வ் வங்கி தயாரித்துள்ளது. அதன்படி கடனை திருப்பி செலுத்த முடியாதவர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் விதிகளில் சில திருத்தங்களை உலக அளவில் வங்கி நிர்வாகங்கள் செய்திருப்பதை ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. வாராக்கடன் மதிப்பு மார்ச் 2020-ல் 8.5 சதவீதமாக இருந்ததாக கூறியுள்ள ரிசர்வ் வங்கி, இந்த மதிப்பீடு மார்ச் 2021-ல் 12.5 சதவீதமாக உயரும் என்று தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று தீவிரமடையும் பட்சத்தில் வாராக்கடன் மதிப்பு 14.5 சதவீதமாக உயரும் என்றும் கூறியுள்ளது. வாராக்கடன் மார்ச் 2018-ல் 11.5 சதவீதத்தில் இருந்து மார்ச் 2019-ல் 9.3 சதவீதமாக குறைந்ததை ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. ஊரடங்கால் நிதித்துறையில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், தேசிய அளவில் நீண்ட காலம் ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளதாகவும், அதன் விளைவாக வங்கிகளில் வாராக்கடன் விகிதம் அதிகரிக்கக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.