பொருளாதார நிலை மேலும் மோசமானால் ஆபத்து:

54 Views
Editor: 0

பொருளாதார நிலை மேலும் மோசமானால் ஆபத்து: 20 ஆண்டில் இல்லாத அளவுக்கு வராக்கடன் அளவு அதிகரிக்கும்: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை.

மும்பை: வங்கிகளின் வராக்கடன் விகிதம் 14.7 சதவீதமாக உயரும் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.    வங்கிகளில் கடன் வாங்கி வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர்கள் பட்டியலை அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சமீபத்தில் வெளியிட்டது. இதில், விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட பெரும் தொழிலதிபர்களுக்கு சொந்தமான 2,426 நிறுவனங்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 17 பொதுத்துறை வங்கிகளுக்கு தராமல் மோசடி செய்துள்ள கடன் 1,47,350 கோடி என குறிப்பிட்டிருந்தது. இத்தகைய வராக்கடன்களால் வங்கிகளின் நிதி நிலை மோசமாக உள்ளது.  இந்நிலையில், நிதி நிலைத்தன்மை குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா பாதிப்பு காரணமாக வராக்கடன் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

 ஊரடங்கால் தொழில்துறைகள் முடங்கிக் கிடக்கின்றன. ஏராளமோனார் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர். வருவாய் குறைந்து விட்டது. இந்த சூழ்நிலையில், கடன் தவணை செலுத்த 6 மாத சலுகை காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 30ம் தேதியின்படி, 48.6 சதவீத வாடிக்கையாளர்கள் இந்த கடன் தவணை சலுகை திட்டத்தை பயன்படுத்தியுள்ளனர். மதிப்பு அடிப்படையில், நிலுவையில் உள்ள கடன் தொகையில் 51.1 சதவீதம் தவணை சலுகையில் சேர்ந்துள்ளது. பொதுத்துறை வங்கி வாடிக்கையாளர்கள் 66.6 சதவீதம் பேர். வங்கி சாரா நிதி நிறுவன வாடிக்கையாளர்கள் 49 சதவீதம் பேர் இந்த சலுகையை பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.   இதுபோல், மார்ச் இறுதியில் இவ்வாறு தவணை சலுகையை பயன்படுத்திய கடன்கள் 25-30 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கடன் தவணை சலுகையால் வங்கிகளின் நிதி நிலை மேலும் மோசமாக வாய்ப்புகள் உள்ளன.

 சமீப ஆண்டுகளாக வங்கிகள் தங்களின் வராக்கடன் அளவை குறைத்திருக்கின்றன. கடந்த 2018 மார்ச் மாதத்தில் வராக்கடன் 11.5 சதவீதமாக இருந்தது. இது 2019 மார்ச்சில் 9.3 சதவீதமாகவும், கடந்த மார்ச் மாதத்தில் 8.5 சதவீதமாகவும் குறைந்துள்ளது. வங்கிகளின் மூலதன விகிதம் கடந்த ஆண்டில் 15 சதவீதமாக இருந்தது. இது கடந்த மார்ச்சில் சற்று குறைந்து 14.8 சதவீதமாக உள்ளது.  தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொள்ளும்போது, நடப்பு நிதியாண்டின் இறுதியில், அதாவது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் வராக்கடன் விகிதம் கடந்த ஆண்டை விட 4 சதவீதம் உயர்ந்து 12.5 சதவீதமாக இருக்கும். பொருளாதார நிலை மேலும் மோசமானால் இது 14.7 சதவீதமாக உயரும்.  இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வராக்கடன் அளவாக இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஏப். 30 வரை பயன்படுத்தப்பட்ட கடன் தவணை சலுகை திட்டம் (கடன் நிலுவை சதவீதத்தில்)

வணிகச் செய்திகள்