புதுடில்லி: 'பாரத் பெட்ரோலியம்' நிறுவனத்தை வாங்குவதற்கான ஏலத்தில், 'பி.பி., மற்றும் டோட்டல்' ஆகிய நிறுவனங்கள் கலந்து கொள்வது சந்தேகமே என, தெரிய வந்துள்ளது.
பிரிட்டீஷ் பெட்ரோலியம் என முன்னர் அழைக்கப்பட்ட, பி.பி., நிறுவனம் மற்றும் பிரான்சைச் சேர்ந்த டோட்டல் நிறுவனம் ஆகியவை, பாரத் பெட்ரோலியத்தை வாங்கும் முயற்சியிலிருந்து பின் வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையங்கள் இருக்கும் சிக்கலான இடங்கள் மற்றும் கடுமையான தொழிலாளர் சட்டங்கள் ஆகியவை காரணமாக, இவை இந்த முடிவுக்கு வந்திருப்பதாக கருதப்படுகிறது. குறிப்பாக, மும்பை மற்றும் கொச்சியில் இருக்கும் சுத்திகரிப்பு நிலையங்களை விரிவாக்கம் செய்வதோ அல்லது புதிய ஆலை அமைப்பதோ முடியாத காரியம் என, கருதுகின்றனர்.
மொத்தம், 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தொழிலாளர் சட்டங்கள் கடுமையாக இருப்பதால், தேவைக்கு அதிகமாக இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைப்பதும் சிரமமாக இருக்கும் என்கின்றனர்.பாரத் பெட்ரோலியம் நாட்டின் மூன்றாவது பெரிய சுத்திகரிப்பு நிறுவனமாகும். மேலும் இரண்டாவது பெரிய எரிபொருள் சில்லரை விற்பனை நிறுவனமும் ஆகும்.தற்போது பாரத் பெட்ரோலியத்தில் அரசு தன் வசம் இருக்கும், 52.98 சதவீத பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது.ரஷ்யாவைச் சேர்ந்த ரோஸ்நெப்ட், சவுதி அரேபியாவைச் சேர்ந்த சவுதி அராம்கோ, உள்நாட்டு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள், ஏல முயற்சியில் ஈடுபடும் என, கருதப்படுகிறது.