`90% தங்க நகைக் கடன்; மாற்றமில்லா ரெப்போ வட்டி விகிதம்!’ - ரிசர்வ் வங்கி ஆளுநர் :
ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை அது 4 சதவிகிதமாகவே தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி இரண்டு மாதத்துக்கு ஒரு முறை நிதித்துறை சார்ந்த கொள்கைகளில் ஆய்வு மேற்கொண்டு அவற்றில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துகொண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த சூழலில், மக்கள் பயன்பெறும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு நிதி சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக இன்று காணொலிக் காட்சி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி
அவர் பேசும்போது, ``ரிசர்வ் வங்கி, பிற வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. அது முன்பு இருந்த 4 சதவிகிதமும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.3 சதவிகிதமாகவே தொடரும். வங்கிகளுக்கான கடன் விகிதத்தில் மாற்றமில்லை என்பதால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதத்திலும் மாற்றம் இருக்காது. தங்க நகைக் கடன்கள் தற்போது உள்ள 75 சதவிகிதத்திலிருந்து 90% - ஆக உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு வீடுகளில் இருக்கும் கோவிட் - 19 தாக்கம் குறையும்.
கொரோனா வைரஸ், தொடர்ந்து பொருளாதாரத்தைப் பாதிக்கும் நிலையில் கடன் வாங்கிய சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்கள் தங்கள் கணக்குகள் தரப்படுத்தப்பட்டதாக இருந்தால் அவர்கள் கடனை மறுசீரமைக்கும் தகுதியுடையவர்கள். தேசிய வீட்டுவசதி வங்கி, வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி ஆகியவைகளால் ரூ. 10,000 கோடி கூடுதல் பணப்புழக்க வசதி வழங்கப்படவுள்ளது. இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் மீளத் தொடங்கியிருந்தன. ஆனால், புதிய தொற்றுகள் மற்றும் புதிய கட்டுப்பாடுகளால் பல உயர் அதிர்வெண் குறிகாட்டிகள் சமன் செய்யப்பட்டுள்ளன.
உலகளாவிய பொருளாதார செயல்பாடு பலவீனமாக உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 2020-21-ம் ஆண்டின் முதல் பாதியிலும் மற்றும் முழு நிதியாண்டிலும் எதிர்மறையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு துறைகளில் விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பணவீக்கப் பிரச்னையும் உள்ளது. கிராமப்புற வளர்ச்சிகள் விரைவில் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.