தங்கத்தை மக்களிடமிருந்து வாங்குவது, அரசின் நிதிச் சிக்கலுக்குத் தீர்வாகுமா?
பொருளாதாரம் தற்போதுள்ள நிலையில், இந்த நிதித் தொகுப்பு மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்பட்டாலும், இதனால் அரசுக்குப் பெரிய அளவில் நிதிப் பற்றாக்குறையும் மிகக் கடுமையான கடன் சுமையும் ஏற்படும்.
அரசின் நிதிச்சுமையைக் குறைக்க முன்வைக்கப்படும் இன்னொரு யோசனை, இந்தியக் குடும்பங்களில் உள்ள தங்கத்தை வெளிக்கொண்டு வருவது.
இதன்படி, அரசு இந்தியக் குடும்பங்களிலுள்ள தங்கத்தைப் பெற்றுக்கொண்டு, அதற்கு பதிலாக அரசுக் கடன் பத்திரங்களை வழங்குவது. பின்னர் இந்தத் தங்கத்தை அரசிடமிருந்து ரிசர்வ் வங்கி பெற்றுக் கொண்டு, புதிதாகப் பணத்தை அச்சடித்து அரசுக்கு வழங்கும்.
ஆனால், கடன் பத்திரங்களை வெளியிட்டு பணத்தை அச்சிடுவதற்கும், தங்கத்தைக் கொடுத்து பணத்தை அச்சிடுவதற்கும் அரசாங்கத்தைப் பொறுத்தவரை பெரிய வித்தியாசமில்லை.'
ரிசர்வ் வங்கி அரசுப் பத்திரத்தை வாங்குவதற்கு பதிலாக, இந்தியக் குடும்பங்கள் வாங்கும், அவ்வளவுதான். இப்படிச் செய்வதாலும் அரசின் கடன் சுமை அதிகரிக்கவே செய்யும். எனினும், தங்கத்தை வெளிக்கொண்டு வந்து அதன் மூலம் புதிதாகப் பணம் அச்சிடுவதன் மூலம் சில செளகர்யங்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இந்தியக் குடும்பங்களிலுள்ள தங்கத்தை வெளிக்கொண்டுவருவது அவ்வளவு எளிதான காரியமல்ல. நம் மக்களுக்குத் தங்கத்தின் மீதான மோகம் அப்படியானது. தங்கத்தை வெளிக்கொண்டு வருவதற்காக இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பெரிய அளவில் பயன் தரவில்லை. தங்கத்துக்கு பதிலாக, அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்ய மக்களைத் தயார் செய்வதும் கடினமே.
- கொரோனா பாதிப்பால் ஊரடங்கு நடவடிக்கை அமல்படுத்தப்பட்ட பிறகு இந்தியப் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்திருக்கிறது.
பெரும்பாலானோர் வேலை இழப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். பல லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் பறிபோயிருக்கிறது.
இத்தகைய நெருக்கடியிலிருந்து பொருளாதாரத்தை மீட்க, கடந்த மே 12-ல் பிரதமர் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்பு நிதித் தொகுப்பை அறிவித்தார்.
பொருளாதாரம் தற்போதுள்ள நிலையில், இந்த நிதித் தொகுப்பு மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்பட்டாலும், இதனால் அரசுக்குப் பெரிய அளவில் நிதிப் பற்றாக்குறையும் மிகக் கடுமையான கடன் சுமையும் ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறிவருகின்றனர். இத்தகைய நிலையிலிருந்து அரசின் நிதிநிலையைக் காப்பாற்ற சில யோசனைகளை முன்வைக்கின்றனர்.
அவற்றில் குறிப்பிடத்தக்கவை என்று பார்த்தால், ரிசர்வ் வங்கி தனக்குத் தேவையான அளவுக்கு ரூபாயை அச்சிட்டுக்கொள்வதும், நம் நாட்டில் குடும்பங்களிலுள்ள தங்கத்தைப் பயன்படுத்துவதும் ஆகும். இந்த யோசனைகள் எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதைப் பார்ப்பதற்கு முன்னர், பொருளாதாரம் குறித்த சில அடிப்படை விஷயங்களில் தெளிவுகளைப் பெறுவோம்.