41 ஒப்பந்தங்கள்; ரூ.30,664 கோடி... முதலீடுகளை ஈர்த்ததில் முதலிடம்! எப்படிச் சாதித்தது தமிழகம்?
கொரோனா பாதிப்பில் தமிழகம் இந்திய அளவில் இரண்டாம் இடம். ஆனால், இந்த நிலையிலும் முதலீடுகளை ஈர்த்ததில் இந்தியாவிலேயே முதலிடம்.
நிதிப் பிரச்னைகளைச் சரி செய்வதற்காக, 'கொரோனா பேரிடர் நிதியை'க் கேட்டு, அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கின்றன. அந்தந்த மாநிலங்களின் கொரோனா பாதிப்புகளைப் பொறுத்து நிதி உதவியை வழங்கி வருவதாக மத்திய அரசு சார்ப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இப்படியான ஒரு சூழலில் இந்திய மாநிலங்கள் முதலீடுகளை ஈர்ப்பது எளிதான காரியம் அல்ல. ஏனெனில், தொடக்கத்தில் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தபோது வெளிநாட்டு முதலீடுகள் அந்த நாட்டுக்குச் செல்வது வெகுவாகக் குறைந்தது. பொதுவாக, பேரிடரைச் சந்திக்கும் இடங்களில் முதலீடு குறைவது இயல்புதான். ஆனால், தமிழகம் அதற்கு விதிவிலக்கு.
தமிழகம் முதலிடம்!
கொரோனா பாதிப்பில் தமிழகம் இந்திய அளவில் இரண்டாம் இடம். ஆனால், இந்த நிலையிலும் முதலீடுகளை ஈர்த்ததில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றிருக்கிறது. கடந்த மே மாதம் 17 தொழில் நிறுவனங்களுடன் மொத்தம் 15,128 கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் தொடர்ச்சியாக ஜூலை 20-ம் தேதி 8 தொழில் நிறுவனங்கள், 23-ம் தேதி 16 தொழில் நிறுவனங்கள் என மொத்தம் 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த முதலீடுகளால் 60,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்?!
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சிறப்பான தொழில் சூழலும், சாதகமான அம்சங்களும் இருப்பதாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நினைக்கிறாகள். அதுமட்டுமல்லாமல் புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவு, ஊக்கச் சலுகைகளை வழங்குவதாலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமிழகம் நோக்கி படையெடுக்கிறார்கள்.
என்னென்ன நிறுவனங்கள்... எந்தெந்தத் துறை?
தமிழகத்தைப் பொறுத்தவரை, தொலைத்தொடர்பு சேவைத்துறைதான் அதிகளவிலான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளது. இதற்கு அடுத்ததாக, ஆட்டோமொபைல் துறைக்கு வெளிநாட்டு முதலீடு குவிந்துள்ளது. வாகனக் கடன்கள் எளிதில் கிடைப்பதால் வாகனப்பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப வாகன உற்பத்தியும் பெருகிவருகிறது. எனவே, இந்தத் துறையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெருமளவு முதலீடு செய்து வருகிறார்கள்.
இதற்கடுத்தபடியாக, சில்லறை மற்றும் மொத்த வர்த்தகத்துறையில் வெளிநாட்டு முதலீடு குவிந்துவருகிறது. மேலும், வங்கிகள், நிதி நிறுவனங்களை உள்ளடக்கிய நிதிச்சேவைகள் துறை, வணிக சேவைகள், கணினி சேவைகள், கட்டுமானம், மின்சாரம், எரிசக்தி உற்பத்தித்துறையில் வெளிநாட்டு முதலீடுகள் அதிக அளவில் வந்துள்ளன.
ஆட்டோமொபைல் துறை - Automobile Industry
குறிப்பாக, ஜெர்மனியைச் சேர்ந்த டெய்ம்லர் நிறுவனம், வர்த்தக வாகனங்கள் தயாரிப்புக்காக 2,277 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது. பின்லாந்தைச் சேர்ந்த சால்காம் நிறுவனம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக கைபேசி தயாரிப்பில் 1,300 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது. தைவானின் அஸ்தான் ஷூஸ் நிறுவனம் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 250 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது.
இங்கிலாந்தின், பவர் ஜெனரேஷன் நிறுவனம் 3,000 கோடி ரூபாயும், பிரான்சின் விவிட்சோலார் எனர்ஜி நிறுவனம் 2,000 கோடி ரூபாயும், அமெரிக்காவின் ஹெச்டிசிஐ நிறுவனம் 2,800 கோடி ரூபாயும், சிங்கப்பூரின் எஸ்டி டெலி மீடியா 1,500 கோடி ரூபாயும், விக்ரம் சோலார் நிறுவனம் 5,423 கோடி ரூபாயும், யோட்டா நிறுவனம் 4,000 கோடி ரூபாயும் முதலீடு செய்கின்றன.
தமிழ்நாட்டில் `ஆப்பிள்' முதலீடு!
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூரிலுள்ள, ஆப்பிள் ஐபோன்களை அஸம்பிள் செய்யும் தைவான் மின்னணு நிறுவனமான ஃபாக்ஸ்கான் (Foxconn) நிறுவனத்தில், ஆப்பிள் நிறுவனம் 7,500 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது. இந்த நிறுவனம்தான் ஜியோமி போன்களையும் தயாரிக்கிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலைமை சீராக இல்லாத காரணத்தால் ஆப்பிள் நிறுவனம் தங்களது பொருள்களைத் தயாரிக்க சீனாவை சார்ந்திருப்பதைத் தவிர்க்க நினைக்கிறது.
ஆப்பிள் நிறுவனம்
அதனால், இந்நிறுவனம் பிற ஐபோன்களையும் இந்தியாவிலேயே தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துக்கு இரண்டு தொழிற்சாலைகள் உள்ளன. இங்குதான் முறையே ஆப்பிள் ஐபோன்களும் ஜியோமியும் தயாரிக்கப்படுகின்றன.
எப்படிச் சாத்தியமானது?!
தமிழகத்தில் முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2015-ல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 2019-ல் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதன்மூலம் 400-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் பழனிசாமி, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, முதலீடுகளை உறுதி செய்தார்.
இந்நிலையில்தான், கொரோனா என்னும் கொடிய அரக்கனிடம் உலகமே மாட்டிக்கொண்டது. இதனால் இந்தியா உட்பட, அனைத்து உலக நாடுகளுக்கும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. இதனால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவுக்கு இடம் மாற்றிட முடிவு எடுத்துள்ளன. இந்த முதலீடுகளைத் தமிழகத்துக்கு ஈர்க்கும் வகையில் தலைமைச் செயலர் சண்முகம் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தமிழக அரசு தீவிரமாகக் களமிறங்கியது.
எடப்பாடி பழனிசாமி
முதலீடுகளை எளிதாக ஈர்ப்பதற்காக, நாடுகளுக்கான சிறப்பு அமைவுகளை உருவாக்குதல், வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்பு பணிக்குழு அமைத்தல் எனப் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதுபோன்ற நடவடிக்கைகளால் தற்போது பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறது தமிழகம். இது, பேரிடர் காலத்திலும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள தலைசிறந்த இடமாகத் தமிழ்நாட்டைக் கருதுவதை எடுத்துக்காட்டுகிறது.
மேலும், வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் நோக்கில் முன்னணி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களான பெடக்ஸ், யு.பி.எஸ், சவுதி அரெம்கோ, எக்ஸன் மொபைல் கார்ப்பரேஷன், சிபிசி பெட்ரோ கெமிக்கல் ஆகிய 5 முன்னணி நிறுவனங்களுக்கு தமிழத்தில் முதலீடு செய்ய வருமாறு கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருக்கிறார் முதல்வர் பழனிசாமி.
வரவேற்கத்தக்க விஷயம்!
வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகத்தின் செயல்பாடு குறித்து, பொருளாதார நிபுணர் வ.நாகப்பனிடம் பேசினோம். "தமிழ்நாட்டுக்கு வெளிநாட்டு முதலீடுகள் வரவேற்கத்தக்க ஒன்றுதான். வெளிநாட்டு முதலீடுகள் வரும்போதுதான் நம்முடைய வளர்ச்சி துரிதப்படும். அதேபோல வெளிநாட்டு நிறுவனங்களை நம் மாநிலத்தில் தொழில் தொடங்க அனுமதிப்பது, நம்மோடு இணைந்து செயல்படும்படி செய்வதும்கூட வரவேற்கத்தக்கதுதான். ஏனெனில், இதனால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். இன்றைய நிலையில் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கொரோனாவால் பெரும்பாலானவர்கள் வேலையை இழந்திருக்கிறார்கள். இந்நிலை மாற வேண்டுமென்றால், தொழில் வாய்ப்புகளை தமிழக அரசு பெருக்கியே ஆக வேண்டும்.
ஹெல்த் இன்ஷூரன்ஸ்
இன்றைய நிலையில் நாம் தினசரி பயன்படுத்தும் பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களும் வெளிநாட்டுத் தயாரிப்புகளின் மூலம் நமக்கு கிடைப்பவையே. ஆனால், எந்தெந்தத் துறைகளில் வெளிநாட்டு நிறுவனங்களை வரவேற்கலாம், எந்தெந்தத் துறைகளில் கட்டுப்படுத்தலாம் என்பதைப் புரிந்து செயல்படுவது மிகவும் அவசியம்.
இன்ஷூரன்ஸ் துறையைப் பொறுத்தவரை பெரிய தொழில்நுட்பம் ஏதும் அதில் இல்லை. நம் நாட்டிலுள்ள இன்ஷூரன்ஸ் நிறுவனங்களே சிறப்பாகச் செயல்படுகின்றன. கிளெய்ம்களுக்கு செட்டில்மென்ட் செய்வதில் வெளிநாட்டு நிறுவனங்களைவிட சிறப்பாகச் செயல்படுகின்றன. அப்படியிருக்கும்போது இன்ஷூரன்ஸ் துறையில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது தேவையற்றது.
"எந்தெந்தத் துறைகளில் வெளிநாட்டு நிறுவனங்களை வரவேற்கலாம், எந்தெந்தத் துறைகளில் கட்டுப்படுத்தலாம் என்பதைப் புரிந்து செயல்படுவது மிகவும் அவசியம்".
- வ.நாகப்பன், பொருளாதார நிபுணர்.
அதேபோல குளிர்பான தயாரிப்பு நிறுவனங்களும் நமக்கு தேவையில்லாதவையே. உள்நாட்டு குளிர்பானங்கள், குளிர்பான நிறுவனங்களே நன்முறையில் செயல்படும்போது, வெளிநாட்டு நிறுவனங்களின் அவசியம் இல்லை. நம்மிடம் அனைத்துத் தொழில்நுட்ப வசதியும் இருக்கின்ற துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் தேவையில்லை. அதேபோல, குறைந்த தேவையே உள்ள துறைகளிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் தேவையில்லை. அதேவேளை, நம்மிடம் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத துறைகளில் வெளிநாட்டு நிறுவனங்களும் முதலீடுகளும் வரவேற்கப்பட வேண்டியவையாகும்" என்றார்.
ஆக, கொரோனா காலத்துக்குப் பிறகு, இதுவரை கையெழுத்தாகியிருக்கும் 400-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில், பெரும்பாலான ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்தாலே, தமிழ்நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் குறையும். நம்பிக்கையோடு இருப்போம்!