ஆடிப்பட்டம் தேடி விதைப்போம்:
ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழி பயிர்கள் பயிரிடும் பட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறுகிறது. முன்னோர்கள் கூறிய பழமொழி அறிவியலோடு சம்பந்தப்பட்டுள்ளது. ஒரு பயிரின் விளைச்சலுக்கு நல்ல வளமான மண், நீர் மற்றும் தரமான விதை தேவை. இருப்பினும் சரியான பருவத்தில் விதைக்காமல் பருவம் தவறி பயிர் செய்தால் பலன் குறைவு. கடும் கோடை காலம் குறைந்து குளிர் காற்றுடன் பருவமழை துவங்கும் மாதம் ஆடி.
இம்மாதமானது விவசாய பணிக்கு உகந்தது. பரவலாக பருவமழை பெய்ய துவங்கியுள்ளதால் காய்கறி விதைகளை விதைக்கலாம். கோடையில் இருகிய மண்ணானது இம்மழையில் சற்று இளகி இருப்பதாலும், இம்மழையால் வளர்ந்த சிறு புற்களை மேயும் மாடு, ஆடுகளின் சாணமானது நிலத்தில் உரமாக சேர்வதாலும் மண் வளமான மண்ணாக இருக்கும்.
விட்டு விட்டு பெய்யும் மழை காய்கறிகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். மழையை தொடர்ந்து பனிப்பொழிவு இல்லாததால் பயிர்களை தாக்கும் நோய்களும் குறைவு. ஆதலால் பயிர் பாதுகாப்பு செலவுகளும் பெரிய அளவுக்கு இருக்காது. பெரும்பாலும் காய்கறிகள் பயிரிடும் விவசாயிகள், வளமான மண், போதிய ஈரப்பதம், குறைவான பூச்சி நோய் தாக்குதல் மற்றும் செலவு குறைவான இந்த ஆடிப்பட்டத்தில் பயிர் செய்தால் அதிக பலன் பெறலாம்.
சி.சிங்காரலீனா,
விதை பரிசோதனை அலுவலர்,
வேளாண் அலுவலர்கள்
க.கண்ணன், பி.பிரபாகரன்,
விதைப்பரிசோதனை நிலையம், திண்டுக்கல்.