`தங்கம் 81% ; வெள்ளி 56%’ - கொரோனாவால் இந்தியாவில் சரிந்த இறக்குமதி:
இந்தியாதான் உலகிலேயே அதிக அளவிலான தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடு. ஒவ்வொரு வருடமும் 800 முதல் 900 டன்கள் வரை இந்தியாவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் தற்போது, இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவானது அதிக அளவில் குறைந்துள்ளது. கொரோனா, அமெரிக்க - சீனா இடையிலான வர்த்தகப் போர் போன்ற சர்வதேச நிகழ்வுகளால் தங்கத்தின் விலை கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருப்பதால், நம் நாட்டில் தங்கத்தை வாங்குபவர்களின் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைந்துள்ளதே இதற்கு முக்கிய காரணம்.
இதனால் கடந்த ஏப்ரல் - ஜூலை காலகட்டங்களில் மட்டும் 81.22% அளவுக்கு தங்கத்தின் இறக்குமதி குறைந்துள்ளது என வர்த்தகத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு $2.47 பில்லியனாக ( ₹ 18,590 கோடி) உள்ளது. அதே சமயம், 2019 - 2020 காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவானது $13.6 பில்லியனாக (₹ 91,440 கோடி) இருந்துள்ளது.
தங்கத்தை போலவே, வெள்ளி இறக்குமதியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் நம் நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளியின் அளவானது 56.5% குறைந்து, $ 685.32 மில்லியனாக ( ₹ 5,185 கோடி) உள்ளது. இதே போல், ரத்தினக் கற்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதியும் ஏப்ரல் - ஜூலை காலகட்டத்தில் 66.36% அளவுக்குச் சரிந்துள்ளது. ஜூலை மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி சற்று உயர்ந்து, $1.78 பில்லியனாக உள்ளது. இது சென்ற மாதத்தில் $1.71 பில்லியனாக இருந்தது கவனிக்கத்தக்கது.
இந்த மாதம் முதல் பண்டிகைக் காலம் ஆரம்பமாகிறது. இனி அடுத்தடுத்து பல பண்டிகைகள் வருவதால், பலரும் தங்கம் வாங்க வாய்ப்பிருப்பதாகத் தங்க நகைகளை விற்கும் நிறுவனங்கள் நினைக்கின்றன. மேலும், ஊரடங்கு நடவடிக்கைகளில் இன்னும் சில வாரங்களில் அனைத்துப் பகுதியிலும் நீக்கப்படும் என்பதால், மக்கள் சுதந்திரமாகக் கடைகளுக்கு வரத் தொடங்குவார்கள். அதன் காரணமாகவும் தங்கம் மற்றும் வெள்ளி நகை விற்பனை அதிகரிக்க வாய்ப்புண்டு என்று சொல்லப்படுகிறது.