சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்வு:
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.39,296க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் அமெரிக்க டாலர் மதிப்பில் சரிவு போன்றவற்றால் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. கடந்த ஜூலை மாத இறுதியில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.41 ஆயிரத்திற்கு மேல் சென்றது.
இந்நிலையில் தங்கம் விலை கடந்த 7ந்தேதிக்கு பிறகு சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 9ந்தேதி முதல் 12ந்தேதி வரை 4 நாட்களில் தங்கத்தின் விலை ரூ.2,400 வரை குறைந்தது. இதன்படி கடந்த 12ந்தேதி தங்கத்தின் விலை, அதற்கு முந்தைய நாள் விலையில் இருந்து ரூ.1,832 குறைந்து ரூ.40,104க்கு விற்பனையானது.
இதேபோன்று கடந்த 24ந்தேதி பவுனுக்கு 360 ரூபாய் குறைந்து ரூ.40,024க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 25ந்தேதி ஒரு கிராம் ரூ.4,921க்கும், ஒரு பவுன் ரூ.39,368க்கும் விற்பனை ஆனது. கடந்த 26ந்தேதி கிராமுக்கு ரூ.18ம், பவுனுக்கு ரூ.144ம் விலை குறைந்து, ஒரு கிராம் ரூ.4,903க்கும், ஒரு பவுன் ரூ.39,224க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதன்பின்னர், சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு நேற்று ரூ.320 குறைந்து ரூ.39,176க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,897 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.
இதன்படி, நேற்றைய விலையுடன் ஒப்பிடும்பொழுது, கிராம் ஒன்றுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,912க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஒரு பவுன் தங்கம் ரூ.39,296க்கு விற்பனையாகிறது. இதேபோன்று, வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.400 உயர்ந்து உள்ளது. ஒரு கிராம் ரூ.71.40 ஆக உள்ளது.